சப்தரிஷிகள் வழிபட்ட தலம். தற்போது வெள்ளாறு என்று அழைக்கப்படும் 'நிவா' நதியின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. சப்தரிஷிகள் ஏழு துறைகளை வணங்குவதற்கு 'நீ வா' என்று அழைத்ததால் இந்த 'நீவா' என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் மருவி 'நிவா' நதி என்று மாறியது. நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் கோயிலுக்கு சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தனது தலையைச் சற்றுத் திருப்பி வெள்ளத்தைப் பார்க்க, அதனால் வெள்ளம் வடிந்ததாக தலவரலாறு தெரிவிக்கிறது.
அழகிய சிறிய கோயில். கோஷ்ட மூர்த்திகளின் வடிவங்கள் மிகவும் அழகாக உள்ளன. சம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களும் அளித்த தலம். வெளிபிரகாரத்தின் பின்புறத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயரில் லிங்கங்கள் உள்ளன.
இங்கு வால்மீகி முனிவருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் சமயக் குரவர்களுக்கு சன்னதி இருப்பதுபோல் சந்தானக் குரவர்களான மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப்பெருமானைப் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். |